விநாயகர் சதுர்த்தி எதிரொலி : வாழை இலை கிடுகிடு விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா? - Vinayagar Chaturthi special
Published : Sep 18, 2023, 9:08 AM IST
தூத்துக்குடி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி காய்கறி சந்தையில் வழக்கத்திற்கு மாறாக காய்கறிகள், வாழை இலை மற்றும் வாழைத்தார்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு காணப்பட்டது.
குரும்பூர், ஏரல், அகரம், குலையன் கரிசல், பெரியநாயகபுரம், அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு வாழை இலை மற்றும் வாழைத்தார்கள் அதிகளவில் வருகின்றன. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இல்லாத காரணத்தினால் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைவாக உள்ளது.
இதனால் தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு வாழை இலை மற்றும் வாழைத்தார் வரத்து குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று (செப். 18) விநாயகர் சதுர்த்தி விழாவை மற்றும் மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலை மற்றும் வாழைத்தார் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
வழக்கமாக 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் பெரிய வாழை இலை கட்டு 6 ஆயிரம் ரூபாய் வரைக்கும், 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சிறிய கட்டு வாழை இலை 3,000 ரூபாய் வரையும் விற்பனையானது. இதேபோன்று நாட்டு பழ வாழைத்தார் 1,000 ரூபாய் வரையும், செவ்வாழை பழத்தார் 1,200 முதல் 1,400 ரூபாய் வரையும் கற்பூரவள்ளி, கோழிக்கோடு, ஆகிய பழத்தார்கள் 800 ரூபாய் வரையும் விற்பனையானது. விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.