தருமபுரி அருகே நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து.. பதைபதைக்கும் வீடியோ! - போக்குவரத்து பாதிப்பு
Published : Nov 28, 2023, 5:13 PM IST
தருமபுரி: நல்லம்பள்ளி அடுத்த கெங்கலாபுரம் என்ற பகுதியில் பெங்களூரூவிலிருந்து கேரளா மாநிலம் நோக்கி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். பேருந்து பயணிகள் இன்றி இயக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து பேருந்து பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும், பேருந்து முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்தது. இதனால் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மயானத்திற்கு பொதுப்பாதை பிரச்சினை.. இறந்தவர் உடல் 3 நாட்கள் வீட்டிலேயே வைக்கப்பட்ட அவலம்.. தருமபுரியில் நடந்தது என்ன?