தூத்துக்குடியில் குருத்தோலை பவனி; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
தூத்துக்குடி:கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஓசன்னா, ஓசன்னா என்று பாடியவாறு பவனியாக சென்றனர். சகேரியா தீர்க்க தரிசனம் நிறைவேறும் வகையில், சமாதானத்தின் தேவனாக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மேல் பவனியாக சென்றார். யூதர்களின் ராஜாவாகிய இயேசு பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது.
இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. கிறிஸ்தவர்கள் குருத்தோலையை பிடித்தவாறு ஆலயத்தை சுற்றி வருவதோடு, ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் ஊர்வலமாக செல்வதும் வழக்கம்.
தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம் ஆலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிற்றைத் தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும்.
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் மிகவும் கஷ்ட தினங்களாக கருதி ஆலய வழிபாடுகளில் பயபக்தியோடு பங்கு பெறுவார்கள். 4,5,6 ஆகிய மூன்று நாட்களும் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறித்து சிறப்பு வழிபாடுகள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும்.
6ம் தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு தனது சீடர்களுடன் போஜனம் பண்ணுவார். சீடரின் கால்களை கழுவுவார், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சாதாரண மனிதரின் காலை கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து 7 ந் தேதி புனித வெள்ளி எனப்படும் பெரிய வெள்ளிக்கிழமையாகும். அன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லப்படும் நிகழ்வை சித்தரிக்கும் வகையில் மும்மணி தியான ஆராதனை ஆலயங்களில் நடைபெறும். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்த்தெழுதல் பண்டிகை ஈஸ்டர் நாளாக கொண்டாடப்படுகிறது.