சுடுகாட்டில் குடியேறி சமையல் செய்த மக்கள்.. தென்காசியில் நடந்து என்ன? - போராட்டம்
தென்காசி:கடையம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தின் பெயரை வெய்க்காலிபட்டி என மாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இந்த பெயர் மாற்றும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர், கிராம நிர்வாகத்தைக் கண்டித்து, மயானத்தில் குடியேறி அங்குச் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவிலும் நீண்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தென்காசி வட்டாட்சியர் ஆதிநாராயணன், கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாத கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர் பொதுமக்கள் ஊரிலிருந்து வெளியேறி சுடுகாட்டுப் பகுதியில் வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டது, அந்தப் பகுதியின் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதா.. ஆளுநரின் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!