ஊருக்கு கிளம்பிய வடமாநில தொழிலாளர்கள் - மலர் சாகுபடியில் தொய்வு! - மலர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
தமிழகத்தில் கட்டுமான பணிகள், ஆயத்த ஆடை தயாரிப்பு, விவசாய பணிகள், பல்வேறு தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது.
இதனால் ஏற்பட்ட பீதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பியதாக கூறப்படுகிறது. மேலும் ஹோலி பண்டிகை காரணத்தாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் தொழிற்சாலைகள், விவசாயம், கூலி என பல்வேறு வேலைகளில் அதிகமான வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது வதந்தி, மற்றும் ஹோலி பண்டிகை காரணமாக ஒசூர் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
ஓசூர் பகுதியில் 90% விவசாயிகள் வடமாநில தொழிலாளர்களை நம்பி ரோஜா, கார்னேசன், கிரசாந்தம், ஜிப்சோ, ஜர்பரா போன்ற மலர் வகைகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பசுமை குடில்கள் மூலம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் மலர்களை அறுவடை செய்ய முடியாமலும், செடிகளுக்கு நீர் பாய்ச்சக்கூட ஆள் இல்லாமலும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் மலர்கள் செடியிலேயே நாசமாவதுடன் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.