சினிமாவில் ஜாதியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் - RV Udayakumar
கோயம்புத்தூர்:லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சுப்பிரியர் கிங்க்ஸ் சார்பாக, கோவை மாவட்டத்தைப் பசுமை மிக்க மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகக் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கோவையைப் பசுமையாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் பீரியட் கிங் சார்பில் செய்து வருவதாகவும், கோவையில் பிளாஸ்டிக் இல்லா த மாவட்டமாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் காரணமாக நாம் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகிறோம் என்பது குறித்து பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், கோவையைப் பசுமையாக மாற்ற இத்திட்டத்தின் மூலம் பல் வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அவர், "திரைப்படங்களில் நான் ஜாதியை எப்போதும் பார்த்ததில்லை, ஜாதி ரீதியான கருத்துக்களை முன்வைத்ததில்லை, நான் எடுத்த திரைப்படங்களான 'சின்ன கவுண்டர்', 'கிழக்கு வாசல்', 'எஜமான்', போன்ற படங்களில் அந்தந்த பகுதிகளில் வாழ்த்த மனிதர்களை முன்வைத்து சினிமா படமாக எடுத்துள்ளேன். சினிமா வேறு அரசியல் வேறு ஜாதியை வைத்து அரசியல் பண்ண வேண்டாம், சினிமாவில் ஒருபோதும் ஜாதி கிடையாது" என்றார்.
இந்த நிகழ்வில், லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சுப்பிரியர் கிங்க்ஸ் அமைப்பின் முதல் நிலை ஆளுநர் நித்தியானந்தம், இரண்டாம் நிலை ஆளுநர் ராஜசேகர், துணைத் தலைவர் சித்தார்த்தா, மற்றும் வெங்கட கிருஷ்ணன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.