Video - ஊட்டியில் அதிமுகவினர் காய்கறி மாலை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்! - மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்
நீலகிரி: காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தற்பொழுது காய்கறிகள் மற்றும் அடிப்படை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. இந்நிலையில் விலைவாசியால் மக்கள் படும் துயரம் அளவிட முடியாதது என கப்பச்சி வினோத் குற்றம்சாட்டினார்.
மேலும், இவற்றை கண்டும் காணாமல் இருந்து வரும் முதலமைச்சரை கண்டித்து அ.தி.மு.க சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச்செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டச்செயலாளர் பாலநந்தகுமார், குன்னூர் நகரச்செயலாளர் சரவணகுமார், உதகை ஒன்றிய செயலாளர் கடநாடு குமார், கோத்தகிரி ஒன்றியச் செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன் பங்கேற்றனர்.
பின்னர், குன்னூர் ஒன்றியச்செயலாளர் பேரட்டி ராஜி, குன்னூர் ஒன்றியச் செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் குருமூர்த்தி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி நகரச் செயலாளரும் கிளைச்செயலாளருமான கார்த்திக், விவசாய அணி துணைச் செயலாளர் சிவலிங்கம், இளைஞர் அணி பிரபுதுர்கா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.