தென்காசியில் நெகிழ்ச்சி: படித்த பள்ளிக்கு பரிசளித்த திருமண தம்பதி - summer holidays
தென்காசி:வழக்கமாக திருமணமாகும் மணமக்களுக்கு நண்பர்கள் சொந்தங்கள் என அனைவரும் திருமண பரிசு வழங்குவது வழக்கம். இந்த வழக்கத்தை உடைக்கும் வகையில் விவசாயி ஒருவர் அவரது திருமணத்தை முன்னிட்டு, அவர் படித்த பள்ளிக்கு நூறு மரக்கன்றுகள் மற்றும் 5 மின்விசிறிகள் மற்றும் அதே பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலமுருகன். இவர் அதே ஊரில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். நெற்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் பாலமுருகனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி திருமணம் நடைபெற்றது.
கோடை விடுமுறையில் பள்ளிதிறக்கப்படாமல் இருந்ததால், பள்ளி திறந்தவுடன், அவர் பயின்ற தொடக்கப் பள்ளிக்கு மணமகளுடன் வந்த விவசாயி பாலமுருகன், பள்ளிக்கு 5 மின்விசிறிகள் மற்றும் நோட்டு புத்தகம் ஸ்லைடு உள்ளிட்டவைகள் வழங்கினார். மேலும் அப்பள்ளி மாணவ மாணவிகளுடன் மனம் விட்டு பேசி இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்கள். பின்னர் மாணவர்களிடையே பேசிய விவசாயி பாலமுருகன் தொடக்கப்பள்ளியில் அவர் பயின்றபோது முன் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
பின்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக புதுமண தம்பதியினர் மரக்கன்றுகளை நட்டனார். பின்பு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அவர்கள் கைகளாலேயே வளாகம் முழுவதும் நடச்செய்தனர். கிராம தொடக்கப் பள்ளியாக இருந்த போதிலும், குறைந்த மாணவர்களே தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் சூழலிலும், தாம் பயின்ற பள்ளிக்கு தமது திருமணத்தை முன்னிட்டு பள்ளிக்கும், பள்ளி மாணவர்களுக்கும் உதவி செய்த அந்த விவசாயிக்கு அப்பகுதி சக விவசாயிகளும் பொதுமக்களும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.