கோவையில் புதிதாக திறக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் விரிசல்.. 'பேட்ச் ஒர்க்' என வலைத்தளத்தில் கிண்டல்! - urban wellness centre patch work
Published : Oct 24, 2023, 9:13 PM IST
கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சி 52வது வார்டு பீளமேடு கல்லூரி நகர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மூலம் காணொளி காட்சி வாயிலாக நகர்ப்புற நல வாழ்வு மையம் புதிதாக திறக்கப்பட்டது.
இந்த மையம் ஒரு நாளில் காலை, மாலை இரு முறை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட இந்த மையத்தின் முன்புற தூணில் பெரியளவு விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இம்மையத்தில் சுற்றுப்புற சுவரும் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் முதர்மண்டி கிடக்கின்றன.
இதற்கு முன்பே அந்த தூணில் விரிசல் ஏற்பட்டு தற்காலிகமாக பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட கட்டிடம், மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சேதமடைந்த தூணையும் சுற்றுபுற சுவரையும் தரமான முறையில் மீண்டும் கட்டித் தர வேண்டும் என்றும், அவ்வப்போது இம்மையத்தின் வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.