அன்னதான திட்டத்தில் முறைகேடு; பழனி முருகன் கோயிலில் புதிய டோக்கன் முறை அமல்!
Published : Oct 20, 2023, 7:04 AM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக இருந்து வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மேலும், விஷேச நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் துவக்கபட்டு செயல்பட்டு வருகிறது.
அதன்படி, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலைக்கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத்தில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் அன்னதானத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனால், அதனை தடுக்கும் வகையில் டோக்கன் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், பழனி முருகன் கோயிலில் டோக்கன் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோயிலில் அன்னதானம் பெறுவதற்கு வரிசையில் நின்ற பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது. ஒரு குழுவிற்கு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 210 பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் தினமும் நடைபெறும் அன்னதானத்தில் எத்தனை பக்தர்கள் பங்கேற்றனர் என்பதை தெரிந்து கொள்வதுடன், முறைகேடுகளை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.