NEET 2023: இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு; காலை முதலே காத்திருந்த மாணவர்கள் - Dharmapuri NEET centers
தருமபுரி: மருத்துவ இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு, இன்று (மே 7) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதனை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 437 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகிறது.
முக்கியமாக செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளி - 360, அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி - 1,213, தருமபுரி டான் சிக்ஷாலயா பப்ளிக் பள்ளி - 1080, விஜய் வித்யாஷ்ரம் பள்ளி - 1,152, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 504, தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி சோகத்தூர் - 456, கமலம் இண்டர்நேஷனல் பள்ளி - 480 மற்றும் நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி -192 ஆகிய 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
இதற்காக காலை 11.40 மணிக்குள் இருந்து 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், இன்று காலை 9 மணி முதலே, தேர்வர்கள் தேர்வு மையங்களில் குவியத் தொடங்கினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தேர்வு மையங்களுக்குச் சீக்கிரம் வந்த மாணவர்களைக் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் அனுமதிக்க முடியாது என வெளியில் காத்திருக்க வைத்தனர்.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்குச் சென்று விட வேண்டும் என்று காலையிலேயே அந்தந்த பள்ளிகளுக்குச் சென்ற மாணவர்கள் வெளியில் காத்து நின்றனர். நீட் தேர்வில் மாணவர்கள், அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிப்பூரில் மட்டும் இன்று நீட் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.