நவராத்திரி விழா; தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு சதஸ் அலங்காரம்! - today thanjavur news
Published : Oct 18, 2023, 8:53 AM IST
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனுறை, பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மேலும் இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலின் கட்டடம் மற்றும் சிற்பக் கலையையும் ரசித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழா கடந்த 15ஆம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. இதனையடுத்து, தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு, மூன்றாம் நாளாக நேற்று (அக்.17) ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக சதஸ் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு, மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், இங்கு கலை நிகழ்ச்சியாக தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம், பக்தி பாடல்கள், வீணை இசை நிகழ்ச்சி ஆகியவை தினமும் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை போன்ற மாநிலங்களிலிருந்து பரதநாட்டியக் கலைஞர்கள் வந்திருந்து நாட்டிய நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.