அரசு வழங்கிய பட்டா நிலம் ஆக்கிரமிப்பு: ராணிப்பேட்டை ஆட்சியரிடம் இருளர் சமூக மக்கள் புகார்! - பட்டா வழங்கிய நிலம்
Published : Oct 16, 2023, 6:39 PM IST
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இருளர் சமூக மக்கள் 25க்கும் மேற்பட்டவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை மீட்டுத் தர வேண்டி அழுது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு பேருந்து நிலையம் பகுதியில், இருளர் சமூக மக்கள் தற்காலிகமாக கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர். முன்னதாக இவர்களுக்கு லாடாவரம் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இருப்பினும், பட்டா வழங்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும், இதுவரையில் அந்த இடத்தை அளவீடு செய்து, தங்களிடம் ஒப்படைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் அம்மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்ட நிலங்களில், சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீட்டுத் தர வேண்டி நரிக்குறவ இன மக்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இன்று (அக்.16) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், உரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்து தங்களில் நிலத்தை மீட்டுத் தர வேண்டி கோரிக்கை விடுத்தனர்.