1,00,008 வடைமாலையில் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்! - Hanuman Jayanti festival
Published : Jan 11, 2024, 12:21 PM IST
நாமக்கல்:அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமாக ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான அனுமன் ஜெயந்தி, இன்று தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில், அதிகாலை முதலே பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நாமக்கல் நகரின் மையப்பகுதியான, கோட்டை சாலையில் அமைந்துள்ள 18 அடி உயரம் கொண்ட புகழ் பெற்ற சுயம்பு ஆஞ்சநேயர் சுவாமிக்கு, அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு, ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், காலை 11 மணிக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையடுத்து, ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
வடைகள் தயாரிக்கும் பணியில் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த 35 பேர் ஈடுபட்டனர். 2 ஆயிரத்து 50 கிலோ உளுந்து மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.