மாட்டுப்பொங்கலன்று மட்டுமே திறக்கப்படும் நடுமலை மாதேஸ்வரன் கோயில்.. உருவபொம்மைகள் வைத்து வழிபாடு!
Published : Jan 16, 2024, 6:22 PM IST
ஈரோடு:ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோயில் விழாவில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகளை தெய்வமாகக் கருதி வழிபடும் மாட்டுப் பொங்கல், கிராமப்புறங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சத்தியமங்கலம் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள விவசாயிகள், தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, கழுத்தில் மணிகள், பாசிகள் சேர்க்கப்பட்ட அலங்காரக் கயிறுகள் கட்டி அழகுபடுத்தினர்.
இதனையடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த கோயிலில் கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும், விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து மண் உருவ பொம்மைகளை காணிக்கையாகச் செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி, விவசாயிகள் மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவ பொம்மைகளை நேர்த்திக்கடனாகச் செலுத்தி வழிபட்டனர்.
மேலும், கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தைக் கொண்டு வந்து, கால்நடைகள் மீது தெளித்து வணங்கினர். ஆண்டுக்கு ஒருமுறை மாட்டுப்பொங்கல் நாளில் மட்டுமே இக்கோயிலில் வழிபாடுகள் நடைபெறும் என்பதால், ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.