மாநகராட்சி தரப்பில் ‘Naa Ready' பாடல் ஒளிபரப்பு.. கோவையில் பரபரப்பு! - Leo
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், தற்போது லியோ என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூல் 22ஆம் தேதி, ‘நான் ரெடி’ என்ற பாடலை வெளியிட்டு இருந்தது.
விஜய் பாடிய இப்பாடல் ஒருபுறம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற, மற்றொருபுறம் விஜய் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கும் வரிகளுக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பாடலில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது, ‘புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு’ என்ற வாசகத்துடம் மறுவெளியீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரேஸ் கோர்ஸ் பகுதிகளில் அமைந்துள்ள டிஜிட்டல் டவரில் ’நா ரெடி’ பாடல் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், மக்கள் கூடும் இடத்தில் அரசு தரப்பில் திரையிடப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.