ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி! போலீசை கண்டதும் ஜூட் விட்ட மர்ம நபர்! - திருட்டு
திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தின் மையப்பகுதியில் தனியார் ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு இந்த ஏடிஎமை கடப்பாரை கொண்டு உடைக்க மர்ம நபர் முயற்சி செய்து உள்ளார். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ஆலங்காயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை கண்டதும் ஏடிஎம் கொள்ளையில் ஈடுப்பட்டிருந்த மர்ம நபர் கடப்பாரையை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி உள்ளார்.
அதன் பின்னர், உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுப்பட முயன்று தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து தனியார் வங்கி ஏடிஎம் முகவர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, "வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள இந்தியா 1 ஏடிஎமில் நள்ளிரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை எளிதில் உடைக்க முடியாத காரணத்தினால், ஏடிஎமில் வைத்திருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தப்பியதாக" தெரிவித்தார். மேலும் இதுகுறித்து ஆலங்காயம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.