‘எனது மண் எனது தேசம்' - வேலூரில் வங்கி ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Published : Sep 24, 2023, 10:24 AM IST
வேலூர்:சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் 'எனது மண் எனது தேசம்' என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகள் டெல்லிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது ‘ஒரே இந்தியா, தலைசிறந்த இந்தியா’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் வகையில், இந்த அமுத பூங்காவனம் அமைக்கப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இந்த முன்னெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும என பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் கந்தனேரி என்ற பகுதியில் வங்கிகளின் சார்பில் எனது மண் எனது தேசம் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.
இந்தியன் வங்கி பொது மேலாளர் ஜமால் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் மகளிர் குழுவினர் அமுத கலசங்களில் மண் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலமாக சென்றனர். மேலும் இது தொடர்பாக மகளிர் குழுவினர் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், வங்கி ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.