வெளியேறு.. வெளியேறு... வேலூர் இப்ராஹீமை விரட்டிய இஸ்லாமியர்கள்! - மனிதநேய மக்கள் கட்சி
திருப்பத்தூர்:ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை விநியோகம் செய்ய சென்ற பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையிலான பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன், திருப்பத்தூர் மாவட்ட பொதுச்செயலாளர் தண்டாயுதபாணி, முன்னாள் நகர தலைவர் அண்ணாதுரை மற்றும் சரவணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அனுமதியின்றி ரெட்டித்தோப்பு பகுதியில், அரசியல் கட்சியின் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஆம்பூர் நகர காவல் உதவியாளர் வெங்கடேசன் கொடுத்தப்புகாரின் பேரில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் மீது 151 CrPC பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 16) வாணியம்பாடியில் உள்ள பஷீராபாத் என்ற பகுதியில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்க துண்டு பிரசுரங்களை வேலூர் இப்ராஹிம் தலைமையிலான பாஜகவினர் வழங்கியபோது, அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் பாஜகவினர் மீது கற்களை கொண்டு தாக்கி விரட்டியபோது வாணியம்பாடி நகர காவல்துறையினர், பாஜகவினரை அங்கிருந்து பத்திரமாக மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஆம்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பாஜகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கியபோது இஸ்லாமியர்கள் அவர்களை தடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.