இந்து கோயில் திருவிழாவிற்கு வரவேற்று இஸ்லாமியர்கள் வைத்துள்ள விளம்பர பேனர்! - அரிகேசநல்லூரில் இஸ்லாமிய சமூகத்தினர்
திருநெல்வேலி: முக்கூடல் அருகே அரிகேசவநல்லூரில் உள்ள ஸ்ரீ அரியநாத சுவாமி திருக்கோயிலில் சுமார் 123 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் இடையே திருவிழா கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
நூற்றாண்டை கடந்து நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் இத்திருவிழாவை பார்க்க சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்களும் ஆவலோடு உள்ளனர். மேலும் பல முக்கிய விஐபிக்களும் இத்திருவிழாவில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த அரிகேசவநல்லூர் கும்பாபிஷேக திருவிழாவிற்கு வருகை தரும் பொது மக்களை வரவேற்று ஆங்காங்கே விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அரிகேசவநல்லூர் பள்ளிவாசல் இஸ்லாமிய ஜமாத் சார்பில் அரியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களை வரவேற்று பேனர் வைத்துள்ளனர். இந்த ஒரே ஒரு பேனர் மட்டும் ஒட்டுமொத்த மக்களையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த கோயில் விழாவிற்கு இஸ்லாமிய மதத்தினர் பேனர் வைத்திருப்பது மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக சமீபகாலமாகவே நாட்டின் பல்வேறு இடங்களில் மதம் சார்ந்த பிரச்சினைகள் நடைபெறுகிறது.
குறிப்பாக வடநாட்டில் மதரீதியாகவும் மத அடையாளங்கள் ரீதியாகவும் பல சர்ச்சைக்குரிய கருத்து மோதல்களும் நடைபெற்று வருகிறது அதே சமயம் தமிழ்நாட்டில் எம்மதமும் சம்மதம் என்ற வார்த்தைக்கு ஏற்ப மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அரிகேசவநல்லூரில் இஸ்லாமிய சமூகத்தினர் இந்து மத கோயில் விழாவிற்கு பொதுமக்களை வரவேற்று பேனர் வைத்திருப்பது பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருவதை பறைசாற்றும் விதமாக இந்த விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.