கர்நாடகாவில் ஐயப்ப பக்தர்களுக்கு 2வது முறையாக தன் வீட்டில் உணவு ஏற்பாடு செய்த இஸ்லாமிய நபர்..! - Sabarimala
Published : Dec 26, 2023, 9:46 PM IST
ராய்ச்சூர்: கர்நாடக மாநிலம், கவிதாலா நகரத்தில் வசிக்கும் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த கரீம் சாப் என்பவர் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து, ஆன்மீக செய்தி அனுப்பி உள்ளார். கரீம் சாப் என்பவர் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இரண்டாவது முறையாக இரவு உணவு ஏற்பாடு செய்துள்ளார்.
முன்னதாக, 58 ஐயப்ப பக்தர்களுக்குத் தனது வீட்டில் வைத்து ஐயப்ப பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது, “ஐயப்ப பக்தர்களுக்கு வீட்டில் பிரசாதம் தயாராகிக் கொண்டிருக்கிறது. நம் மதத்தை நேசிப்பதைத் தவிர, பிற மதங்களையும் நேசிக்க வேண்டும் மற்றும் மதிக்க வேண்டும் என்றார்.
அந்த வகையில், இந்த பணியினைச் செய்து வருகிறோம் என்றும், இந்த பகுதியில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்” என்று கூறினார். சமூகத்தில் ஆங்காங்கே சாதிய மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்து - முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் இருப்பது பெருமையாக இருக்கின்றது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.