முனியப்பன் கோயில் திருவிழா; ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் வழிபாடு! - பென்னாகரம் கோயில் திருவிழா
Published : Dec 27, 2023, 11:27 AM IST
தருமபுரி:பென்னாகரம் முனியப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (டிச.26) ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 2வது செவ்வாய் கிழமை, பிரமாண்டமாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், மார்கழி மாதம் 2வது செவ்வாய் கிழமையான நேற்று (டிச.27) திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பென்னாகரம் மட்டுமல்லாமல் தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்தும், அலகு குத்தியும், கரகம் எடுத்தும், முனியப்பன் வேடமிட்டும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
மேலும், திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். திருவிழாயொட்டி பி.அக்ரஹாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்ப்பதற்காக பென்னாகரம் காவல் துறையினர் சார்பில், 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு, தருமபுரி-ஒகேனக்கல் பிரதான சாலை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.