முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு; மழை வேண்டி மூன்று மதத்தவரும் இறைவழிபாடு - Agricultural Society
தேனி: தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனநீர் ஆதாரமாகவும் இந்த அணை அமைந்து உள்ளது.
இந்த அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி, முதல் போக விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விவசாயிகளும் நாற்று நடும் பணியினை தொடங்கினார்கள். இந்நிலையில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் உரிய நேரத்தில் மழை பொழிவு இல்லாமல் காலம் தாழ்த்துவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து தற்பொழுது 116.30 அடியாக உள்ளது.
இந்நிலையில் முதலாம் போக விவசாய பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு நீரினை பயன்படுத்துவோர், விவசாய சங்கம் சார்பாக மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மழை வேண்டி இறைவழிபாடு செய்து புனித நீரினை அணையில் தெளித்து மழை வளம் வேண்டி வழிபாடுகளை நடத்தினார்கள்.
இதில் இந்து மதம், இஸ்லாமிய மதம் மற்றும் கிறித்துவ மதங்களின் சார்பில் அணையில் நீர் வர வேண்டி சிறப்பு இறைவழிபாடு நடத்தினர். மூன்று மதத்தினரும் விவசாய தேவைக்காக அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை வர வேண்டி வழிபாடு செய்தது ஒரு புறம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு