காட்பாடியில் நடைபெற்ற மிஸ்டர் சவுத் இந்தியா ஆணழகன் போட்டி; 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! - பெண்கள் அழகு போட்டி
Published : Jan 8, 2024, 10:34 AM IST
வேலூர்: காட்பாடியில் வேலூர் மாவட்ட உடற்தகுதி சங்கம் மற்றும் எவரெஸ்ட் ஜிம் இணைந்து நடத்திய தென்னிந்திய ஆணழகன்களுக்கான ஆணழகன் போட்டி காட்பாடி ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு 45 கிலோ எடை பிரிவு முதல் 95 கிலோ எடை பிரிவு வரை தங்களுடைய உடல் திறன் அழகை காட்டி பரிசுகளை தட்டிச் சென்றனர்.
மேலும் பெண்கள் பிரிவில் தென்னிந்திய மாவட்டங்களிலிருந்து பெண்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் உடல் திறன் அழகை காட்டி பரிசுகளை தட்டிச் சென்றனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் மிஸ்டர் சவுத் இந்தியா பட்டத்தை கர்நாடகாவை சேர்ந்த அருண் வென்றார். பெண்கள் பிரிவில் மிஸ் சவுத் இந்தியாவாக தெலுங்கானாவை சேர்ந்த சையத் ஆசிபா வென்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வேலூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்கத்தின் இயக்குனர், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களின் தலைவர் சேகர் ரெட்டி மற்றும் விஐடி துணை தலைவர் செல்வம் ஆகியோர் ரொக்க பரிசாக பணம், சான்றிதழ் மற்றும் வெற்றி கோப்பைகளை வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை சங்க தலைவர் ஜெயக்குமார் மற்றும் செயலாளர் ரயில்வே குமார் ஆகியோர் செய்திருந்தனர்.