கையில் செங்கோல் எடுத்தது தமிழநாட்டையே கையில் எடுத்ததுபோல் அல்ல - கனிமொழி - Tenkasi
திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். அந்த வகையில், திமுக மாவட்ட கவுன்சிலர் இல்ல நிகழ்ச்சியில் எம்பி கனிமொழி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய கனிமொழி, “திமுக தமிழ்நாட்டில் உருவாக்கி வைத்திருக்கக்கூடிய கொள்கைகள், பெருமைகளை அழித்து விட வேண்டும் என மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. மேலும், நமது மொழி மற்றும் நமது சரித்திரங்களைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என மத்தியில் ஆளக்கூடிய பாஜகவினர் நினைக்கின்றனர்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு கையில் செங்கோலை எடுத்து விட்டால், தமிழ்நாட்டையே தங்கள் கையில் எடுத்து விட்டதாக பாஜக அரசு தவறாக நினைத்து வருகிறது. இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதாக வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இருக்க வேண்டும்”, எனப் பேசினார். இந்த நிகழ்வின்போது, திமுக மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.