தொடர் விடுமுறை எதிரொலி : ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்! போக்குவரத்தால் திக்குமுக்காடிய பொள்ளாச்சி சாலை! - பொள்ளாச்சி சுற்றுலா தளம்
Published : Oct 2, 2023, 10:50 AM IST
கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும், சுற்றுலாப் பகுதியான இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில் பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கவியருவியில் குளிப்பதற்காக காலை முதலே அதிக அளவில் வருகை புரிந்தனர். தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கவியருவியிலும் மழை பெய்து, அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
கொட்டும் மழையில் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் வருகை புரிந்ததால், அருவியில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும் சூழல் நிலவி வருகிறது. அது மட்டுமின்றி ஆழியார் கவியருவி அருகே பார்க்கிங் செய்ய முடியாமல், சிலர் பொள்ளாச்சி வால்பாறை மலைப்பாதை சாலை ஓரங்களில் கார்களை நிறுத்தி உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.