Manipur violence: குன்னூரில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்டன ஊர்வலம்
நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், மணிப்பூர் மாநில பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணாக்கர்கள் சார்பில் கண்டன ஊர்வலம் இன்று (10.08.2023) நடைபெற்றது.
இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் பங்கேற்ற கல்லூரி, மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்று வலியுறுத்தி ஊர்வலத்தில் கோஷமிட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் நான்காம் தேதி பழங்குடியின பெண்கள் சித்திரவதை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தினை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 700க்கும் மேற்பட்டோர் சிம்ஸ் பூங்காவில் துவங்கி மவுண்ட் ரோடு வழியாக, கையில் பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பி தீயணைப்பு நிலையம் வரை ஊர்வலமாக நடந்து வந்தடைந்தனர்.