"உன் வண்டி டயர்ல வச்சு நசுக்கு" ஏர் ஹாரன் விவகாரத்தில் தஞ்சை போலீஸ் புது ஐடியா! - அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் நீக்கம்
தஞ்சாவூர்:பேருந்து மற்றும் போக்குவரத்து வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்குச் செவித்திறன் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைபாடு ஏற்படுகிறது. மேலும் அதிக ஒலியால் பொதுமக்கள் நிலை தடுமாறி கீழே விழும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க அடுத்து தமிழக அரசு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அகற்றப் போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவற்றை அகற்றி பேருந்து டயர்களில் வைத்து நொறுக்கப்பட்டன.
இது குறித்து போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறும்போது, ’’ஏர் ஹாரன் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. இதைப் பயன்படுத்துவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் செவித்திறன் பாதிக்கும் நிலை உள்ளது. ஏர் ஹாரன் பயன்படுத்தும் போது அடிக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் உள்ள ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டன. மேலும் பேருந்து ஓட்டுநர்களுக்குத் தக்க அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் மேற்கொண்டு ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டால் ரூபாய் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.