திண்டுக்கல்லில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா.. மீன்களைப் பிடித்து மகிழ்ந்த மக்கள்..
Published : Dec 17, 2023, 7:27 PM IST
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கெண்டைய கவுண்டனூர் கிராமத்தில் உள்ளா பெரியகுளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தாண்டிற்கான மீன்பிடித் திருவிழா இன்று (டிச.17) வெகு விமரிசையாக நடைபெற்றது.
மீன்பிடித் திருவிழா நடத்தப்படும் எனச் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், மீன்களைப் பிடிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்தின் கரையில் காத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதி அளித்தவுடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் குளத்தில் இறங்கி வலை, கத்தா, சேலை, கொசு வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்கத் தொடங்கினர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, லோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. அதிலும் ஒரு சிலருக்கு அதிக எடை கொண்டதேளி விரால் மீன்கள் கிடைத்துள்ளது. பிடிக்கப்பட்ட மீன்களைச் சமைத்து இறைவனுக்குப் படைத்து விட்டு அதன்பின் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.