ரூ.1,000 கேட்டால் 3,000 ரூபாய் கொடுத்த ஏடிஎம்.. வேலூரில் நடந்தது என்ன? - Kudiatham SBI ATM
வேலூர் மாவட்டம்குடியாத்தம் நான்கு முனை கூட்ரோடு பகுதியில் ஸ்டேட் பேங்குக்குச் சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இங்கு ஆயிரம் ரூபாய்க்கு பணம் எடுத்தால் ஆறு 500 ரூபாய் நோட்டுகள் என மூன்று ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. இதனை அறிந்த பலர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்தை தற்காலிகமாக சோதனை மேற்கொண்டு ஏடிஎம் மையத்தை மூடினர். மேலும் இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தொழில்நுட்ப காரணத்தினால் ஆயிரம் ரூபாய்க்கு பதில் 3 ஆயிரம் ரூபாய் வந்ததாகவும், ஒரு 500 ரூபாய் நோட்டும் ஐந்து 100 ரூபாய் நோட்டுகள் வர வேண்டியதற்கு பதிலாக, ஆறு 500 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கலாம் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.