மணிப்பூர் கலவரம்: நேரு எம்.எல்.ஏ, சமூக அமைப்புகள் - புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்! - rape of women
புதுச்சேரி:மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரம், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவம் மற்றும் அவற்றை மத்திய அரசு தடுக்கத் தவறியதாக கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொது நல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், "மாதக்கணக்கில் பற்றி எரியும் இந்த மணிப்பூர் சம்பவத்தை மத்திய மாநில அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது இந்தியாவிற்கே அவமானம், இச்சம்பவங்களுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கிறோம்" என்ற வாசகங்களுடன் கூடிய பேனருடன் புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பாக ராஜா தியேட்டர் சிக்னல் அருகே நடைபெற்றது.
தமிழர் களம் அழகர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ உட்ப்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.