திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டம்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு! - polling station
Published : Oct 22, 2023, 9:42 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.22) நடைபெறுகின்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்திற்கு சிறப்புரை ஆற்ற வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ.காட்டுக்குளம் கிராமத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவந்தன், செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் உள்பட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, வரவேற்பு நிகழ்ச்சியில் மேளதாளம், கரகாட்டம், தாரை தப்பட்டை, பறை இசை மற்றும் பெண்கள் கும்பம் கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் தேதி திருப்பூர் காங்கேயம் அருகே படியூர் சிவகிரியில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.