நாட்றம்பள்ளி அருகே கானாற்றில் குளியல் போட்ட யானைகள்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை - Tirupattur News in Tamil
திருப்பத்தூர்:கடந்த 12ஆம் தேதி ஆந்திரா மாநிலம், குப்பம் மல்லானூர் பகுதியில் உஷா மற்றும் சிவலிங்கம் ஆகிய இரண்டு பேரை யானை மிதித்துக் கொன்றது. இந்நிலையில், தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியான நாட்றம்பள்ளி அருகே தகரகுப்பம், தண்ணீர் பந்தல், கரடிகுட்டை ஆகியப் பகுதியில் 2 யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும், திம்மம்பேட்டை, தகரகுப்பம், கரடிகுட்டை தண்ணீர் பந்தல் ஆகியப் பகுதிகளில் யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று காலை தகரகுப்பம் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், ஆத்தூர்குப்பம் வழியாக தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்று, அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு, அப்பகுதியில் உள்ள கானாறு ஓடைகளில் குளித்து விளையாடின.
இதைத்தொடர்ந்து, இவ்விரண்டு யானைகளும் முகாமிட்டுள்ள பகுதிகளில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், 'ஆத்தூர் குப்பம், ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் இரண்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வருவாய்துறையினர், காவல்துறையினர், வனத்துறையினர், ஆகியோர் இணைந்து யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் முழு மூச்சாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இது; யானைகளைப் பார்க்க யாரும் எங்கும் செல்ல வேண்டாம். அவைகள் பொதுமக்களை கண்டு மிரள்கின்றன. ஆந்திரா வனப்பகுதியில் ஏற்கனவே, 2 பேர் உயிரிழந்துள்ளனர். யாரும் யானைகள் மீது கற்களைக் கொண்டு எறியாமல், புகைப்படம் எடுக்காமல் இருங்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி மண்டலத்திலிருந்து வேட்டைத் தடுப்பு பிரிவு காவலர்கள் வரவழைக்கப்பட்டு இரவு நேரத்தில் யானைகளை வனப்பகுதியில் விரட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.