''நாட்டாமை பாதம் பட்டால்'' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாரட்டு வண்டியில் சவாரி! - உதயநிதி ஸ்டாலின் குதிரை வண்டியில் சவாரி
திருவாரூர்: திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரை வண்டியில் சவாரி செய்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சாரதியாக இருந்து குதிரை வண்டி ஓட்ட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னால் அமர்ந்து ''நாட்டாமை'' பட பாணியில் ஒரே வண்டியில் பயணித்தார்.
திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவைச் சேர்ந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நண்பரும் மறைந்த திமுக பிரமுகருமான தென்னனின் நூறாவது பிறந்தநாள் விழா, மறைந்த மாவட்டக் கழக அவைத் தலைவர் சித்தமல்லி சோமசுந்தரத்தின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, விழா மேடைக்கு செல்ல குதிரை வண்டி பூட்டிய சாரட்டு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.