திருவள்ளூரில் ரூ.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி! - mk stalin
Published : Sep 1, 2023, 6:39 AM IST
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புத் திட்டம் செயலாக்கத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு துறைகளைச் சார்ந்த 912 பயனாளிகளுக்கு சுமார் 36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும், அதைப் பயனாளிகளுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு அளித்துள்ள திட்டங்களை மக்களிடத்தில் சீக்கிரம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அரசுத் திட்டங்கள் தொடர்பாக மாவட்டம் வாரியாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், அரசு நிறையத் திட்டங்கள் கொடுத்திருப்பதால் அந்தந்த திட்டங்கள் எந்த அளவுக்கு நடைபெற்று வருகின்றன எனவும், அதில் சிறப்பாக நடைபெற்ற திட்டங்களுக்குப் பாராட்டுகளும், தொய்வு ஏற்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் தேதிகள் பெறப்பட்டிருப்பதாகவும், இன்று ஆய்வு மேற்கொண்ட துறைவாரியான திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் முதலமைச்சர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.