சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த அமைச்சர் சேகர் பாபு! - சேகர் பாபு
Published : Nov 21, 2023, 1:25 PM IST
பத்தனம்திட்டா: கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு அருகே அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த வருடம் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 17ஆம் தேதி முதல் மண்டல காலம் தொடங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதனை அடுத்து, மண்டல பூஜைக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள் மட்டுமின்றி, வார நாட்களிலும் பக்தர்கள் அதிகம் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (நவ.20) மாலை சபரிமலைக்கு வந்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இருமுடியுடன் 18ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, சன்னிதானத்தில் உள்ள மாளிகைபுரத்து அம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார். மேலும்,, தரிசனம் முடித்த அமைச்சருக்கு ஐயப்பன் விக்கிரகத்தில் பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.