குன்னூர் பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்! - minister ramachandran recent news
Published : Oct 6, 2023, 7:27 PM IST
தென்காகி: தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கடந்த 30ஆம் தேதி ஊட்டி பகுதிக்குச் சுற்றுலா சென்று ஊர் திரும்பும் போது, குன்னூர் மலைப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தென்காசி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, விபத்தில் உயிரிழந்த 9 பேரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.