"எனக்கு ஓட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்களா" மீண்டும் சர்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி! - திருவெண்ணைநல்லூர்
விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரூ. 5 கோடியே 29 லட்சம் மதிப்பிலான பாலம் மற்றும் ரூ. 37 லட்சம் மதிப்பிலான பள்ளி சுற்றுச் சுவர் திறப்பு விழாவில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.
அப்போது, தான் சட்டமன்ற உறுப்பினராக ஆன பின்பு அருங்குறிக்கை கிராமத்திற்குப் பேருந்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செய்ததாகக் கூறினார். அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக கூறினர். இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த அதிகாரிகளிடம் அமைச்சர் இதுகுறித்து விசாரிப்பதற்குள், பொதுமக்களிடையே சலசலப்பு அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து, அருங்குறிக்கையில் ”அப்படியே எனக்கு ஓட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க.. என்று எனக்கு தெரியும்” என காட்டமாகப் பேசினார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சுதாரித்துக்கொண்ட அமைச்சர், பொதுமக்கள் உங்களது கோரிக்கைகளை மனுவாகக் கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பொதுமேடையில் பெண்களுக்காக இலவச பேருந்து சேவையை 'ஓசி' பயணம் என்ற தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.