ஒப்பந்ததாரருக்கு கடுமையான வார்னிங் கொடுத்த அமைச்சர்! - alangudi girls school
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்குத் தேவையான கலையரங்கம் மற்றும் ஆய்வகம், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நேற்று (ஏப்ரல் 20) ஆய்வு செய்தார்.
அப்போது, “40 நாட்களுக்கு முன்பு பூமி பூஜை செய்யப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் கட்டி முடியும் தருவாயில் உள்ள நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வரை முறையாக கட்டடம் கட்டும் பணி நடைபெறவில்லை (இந்த கட்டுமானப் பணிகள் தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது). இந்தக் கட்டடத்தை முறையாகவும், தரம் வாய்ந்ததாகவும் கட்ட வேண்டும். ஹாலோ ஃபிளாக் போன்ற கற்களைப் பயன்படுத்தாமல், செங்கல் கற்களை வைத்து கட்டடத்தைக் கட்ட வேண்டும்.
அரசு கட்டடம் போல் அல்லாமல், சொந்தக் கட்டடமாக தனியாருக்கு நிகராக உள்ள கட்டடமாக இருக்க வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால், வேறு ஆள் வைத்து கட்டடத்தை கட்டிக் கொள்வோம்” என ஒப்பந்ததாரரை அமைச்சர் மெய்யநாதன் எச்சரித்தார்.