மேடை ஏறும்போது தடுமாறி விழுந்த அமைச்சர் கே.என். நேரு! - அமைச்சர் கே என் நேரு
சேலம் மாநகரில் மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் ஏற்பாட்டில் நடந்த இந்த விளையாட்டுப் போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த நிலையில் நேற்று இரவு விளையாட்டுப் போட்டியின் இறுதி விழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த அணிகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் பரிசுகள் அளித்து கௌரவித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு, மேடை ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அமைச்சரின் வலது காலில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு காயமானது. அப்போது அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தூக்கிவிட்டு பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச்சென்று அமர வைத்தனர்.
கீழே விழுந்த போதிலும் நிகழ்ச்சியில் இறுதிவரை கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி புறப்பட்டுச் சென்றார், அமைச்சர் கே.என். நேரு. எதிர்பாராமல் அவர் தவறி விழுந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
இதையும் படிங்க:பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட குழு.. 14417 என்ற உதவி எண் அறிவிப்பு!