புல்லட்டில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு.. திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு பணிகள் தீவிரம்! - Salem District
Published : Dec 17, 2023, 1:58 PM IST
சேலம்:ஆத்தூர் அருகே நடைபெற உள்ள திமுக இளைஞரணி இரண்டாவது மாநாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் டிச.24-ஆம் தேதி இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு சிறுபான்மை அமைப்பினர் பங்கு பெற உள்ளனர்.
இந்நிலையில், அதற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆய்வுக்காக மாநாட்டு திடலுக்கு வந்த அவர், மாநாட்டு திடல் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு இருசக்கர வாகனத்தில் சென்று மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆய்வின்போது, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், திமுக மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.