Theni Elephant: அட்டகாசம் செய்யும் அரிசி கொம்பன்.. "நம்மகிட்ட கோடிக்கணக்கான படையா இருக்கு" - பேட்டியின் போது கடுப்பான அமைச்சர்! - elephant
தேனி: கம்பம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஆட்கொல்லி அரிசி கொம்பன் யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஆகையால் வனத்துறையினர் யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கம்பம் வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி யானையைப் பிடிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.பெரியசாமி பேசுகையில், “அரிசி கொம்பன் யானையை அது இருக்கும் இடத்திலிருந்து கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்படும். நாளை யானையைப் பிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறும். வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
நாளை காலை கம்பத்திற்கு வனத்துறை அமைச்சர் வர உள்ளார். பிடிக்கப்படும் யானையை வேறு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பிடிக்கப்படும். கும்கி யானைகள் தற்போது தேனி மாவட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது நாளை காலை கம்பம் வந்தடையும். யானை இருக்கும் 100 மீட்டர் தொலைவில் இரண்டு குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது தனியார் திருமண மண்டபம் அருகே வந்த அரிசி கொம்பன் யானை வந்ததாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திருமண மண்டப கதவு பூட்டப்பட்டது. யானை மீண்டும் திரும்பிச் சென்ற பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி வாகனம் திருமண மண்டபத்திலிருந்து சென்றார்.