பொன்முடி வீட்டில் ரெய்டா..? - எனக்கு தெரியாது என கூறிய அமைச்சர் துரைமுருகன்! - Vellore news
வேலூர்:இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியாது. வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தைத் தமிழகத்திலேயே சிறந்த மைதானமாக மாற்றிக் காட்டுவேன்.
இந்த விளையாட்டு மைதானம் சுற்றி சுற்றுச்சுவர் நிறுவப்படும் வேண்டும். இந்த மைதானத்தைப் பராமரிப்பதற்கான பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. விரைவில் பணியாளர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இங்கு அமைந்திருக்கும் நீச்சல் குளத்திற்கு அருகாமையில் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் டேங்க் கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியிலிருந்து நீச்சல் குளத்திற்குத் தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு உள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன் மாணவர்களுக்கு இந்த பகுதியிலே நிரந்தரமான தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்டுள்ளதாக” தெரிவித்தார்.