'கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் வடிகால் வாரியம் தனித்துறையாக உருவானது' - அமைச்சர் எ.வ.வேலு!
திருவண்ணாமலை: கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் வடிகால் வாரியம் தனித் துறையாக உருவானது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம். 1972ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் வடிகால் வாரியம் என்ற துறை தனியாக ஏற்படுத்தப்பட்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை பல்வேறு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தது.
திருவண்ணாமலை குடிநீர் வழங்கல் துறை சார்பில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்டவலம் முதல்நிலை பேரூராட்ரி மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் 2022 மற்றும் 2033ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 24.77 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 என்ற மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டது. மாநில அரசுகள் செலுத்த கூடிய வரியின் மூலமாக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்தியாவில் முதல் கட்டமாக 14 மாநிலங்களில் அம்ரூத் 2.0 திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தம் 167 நீர் நிலையங்களை புணரமைக்க ரூ113.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் அம்ரூத் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம், புதுப்பாளையம், கண்ணமங்கலம், ஆகிய பேரூராட்சிகளில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. வேட்டவலம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் ரூ.13,89 கோடி மதிப்பீட்டில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “1972ம் ஆண்டு டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் குடிநீர் வடிகால் வாரியம் என்ற துறை தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டு,
தமிழ்நாடு முழுவதும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை பல்வேறு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. மேலும் தமிழ்நாடு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க பெறும் மாநிலம். சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டும் நோக்கத்தில் சிறப்பான ஆட்சி நடை பெற்று வருகிறது” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் புதுப்பாளையம் பேரூராட்சியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பேரூராட்சில் கூடுதல் முன்னேற்றம் வேண்டும் என்ற நோக்கத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தில் கீழ் ரூ.10.88 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆளுநர் கட்டுப்பாடோடு நடந்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது - அமைச்சர் பொன்முடி காட்டம்