'எண்ணும் எழுத்தும்' பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
திருப்பத்தூர்:கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் இயங்க முடியாத சூழல் உருவானதையடுத்து மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை நிரப்பத் தமிழ்நாட்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் 16 லட்சம் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி துவங்கப்பட்டது.
ஓராண்டுக் காலமாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்த எண்ணும் எழுத்தும் திட்டம், தற்போது இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளதைக் கொண்டாடும் விதமாக ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பெத்லேகம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பள்ளியில் மாணவர்கள் அமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அதன் பின்னர் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த படகில் அமைச்சர் பயணம் செய்தார். மேலும் பள்ளியில் புதியதாக ஆங்கில ஆய்வகத்தையும் திறந்து வைத்தார். பின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பேனரில் கையெழுத்திட்டு, எண்ணும் எழுத்தும் அடங்கிய பரப்புரை வாகனத்தைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் எண்ணும் எழுத்தும் பதாகையில் கையெழுத்திட்டனர்.