அப்துல் கலாமின் பொன்மொழிகளைக் கொண்ட ‘மினியேச்சர்’ புத்தகங்கள்! - அப்துல் கலாமின் பொன்மொழிகள்
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பொறியாளர் லூயீஸ் என்பவர் அப்துல் கலாம் பொன்மொழிகள் அடங்கிய கையடக்க புத்தகத்தை தயார் செய்து, அதனை பழங்குடி கிராம பள்ளி குழந்தைகளுக்கு வழங்குகிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 8வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 27) இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அப்துல் கலாம் நினைவு நாளில் கோவை - கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராமப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அப்துல் கலாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்பதற்காக கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர் லூயீஸ் (42) என்பவர் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய 2 சென்டி மீட்டர் உயரம், 1.5 சென்டி மீட்டர் அகலம் என 64 பக்கங்கள் கொண்ட கையடக்க புத்தகம் தயார் செய்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 7 மொழிகளில் அச்சிடப்பட்ட சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக வழங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனைக்கட்டி, மாங்கரை, வயநாடு உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும் விரைவில் 22 மொழிகளில் அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் பொறியாளர் லூயீஸ் தெரிவித்துள்ளார்.