திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் மினி வேன் கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் படுகாயம்!
Published : Oct 18, 2023, 2:02 PM IST
ஈரோடு:திம்பம் மலைப்பாதையில் தென்னங்கன்றுகளை ஏற்றிச் சென்ற மினி சரக்கு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் இருந்து தென்னங்கன்று பாரம் ஏற்றிய மினி சரக்கு லாரி, திருப்பூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது திம்பம் மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் வாகனம் திரும்பியபொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனின் முன் பகுதி சேதம் அடைந்ததோடு, வாகனத்தில் இருந்த தென்னங்கன்றுகள் வனப்பகுதியில் சிதறி விழுந்தது. இந்த விபத்தில் மினி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் காயமடைந்தார். இதனையடுத்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டுநர்கள், விபத்தில் சிக்கிய வாகனத்திலிருந்து கயிறு கட்டி ஓட்டுநரை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஓட்டுநர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆசனூர் போலீசார், விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.