வேலூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த மினி லோடு வேன்! - வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா
வேலூர்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டையில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி லோடு வேன் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்பூர், கே.எம். நகர் பகுதியைச் சேர்ந்த முனீர் அகமத் (42) மற்றும் அவரது நண்பர் ஜமீல் (40) ஆகிய இருவரும் ஆம்பூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனிக்கு இரும்பு சாமான்களை கொண்டு சென்றுள்ளனர்.
ராணிப்பேட்டையில் இரும்பு சாமான்களை இறக்கிவிட்டு, மீண்டும் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தின் இன்ஜினில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதனால் முனீர் அகமத் உடனடியாக வாகனத்தை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு அதிலிருந்து இருவரும் கீழே இறங்கி உள்ளனர். கீழே இறங்கிய சிறிது நேரத்திற்குள்ளாக அந்த வாகனம் தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், அப்பகுதி மக்கள் குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து உள்ளனர். மேலும், விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.