தென்காசியில் பயணிகளை ஏற்றுவதில் மினிபஸ் ஊழியர்களிடையே கைகலப்பு! - Tirunelveli alangulam
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இரண்டு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் அருகே உள்ள அத்தியூத்து, ரெட்டியார்பட்டி, வி.கே.புதூர், கீழச்சுரண்டை மற்றும் கலங்கள் உள்ளிட்ட ஏராளமான கிராமப்புறப் பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். எனவே, கல்லூரிக்குச் செல்வதற்காக அவர்கள், தங்களுடைய கிராமங்களில் இருந்து வந்து, ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து மினி பேருந்து மூலமாக கல்லூரிக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 15) காலையில் கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றுவது தொடர்பாக ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டு மினி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டு சண்டை போட்டுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக இதேபோல் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறின் அடிப்படையில், மினி பேருந்து கம்பெனி மீது ஆலங்குளம் காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.