வண்டலூரில் சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செங்கல்பட்டு:சர்வதேச சிறுதானிய வருடமாக 2022 - 2023 கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று (ஆகஸ்ட் 13) விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுதானியங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டு மாவட்ட உணவுத் துறை சார்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
“சிறுதானியங்களின் அற்புதம், ஊட்டசத்துகளின் உறைவிடம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வரகரிசி, சாமை, கம்பு, மக்காச்சோளம் போன்ற சிறுதானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
முன்னதாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “உலக மக்கள் அனைவரும் சிறுதானியத்தின் அவசியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 2022 - 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா சபை அறிவித்துள்ளது.
அதனை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது” என தெரிவித்தார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், உணவுத் துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், செல்வம், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.